Sunday, June 5, 2011

தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது என மகிழ்வோம்! கலவரம் வேண்டாம்!(சவூதி "நிடாகத்" திட்டம்,



அஸ்ஸலாமு அலைக்கும்

கலவரம் வேண்டாம். களிஉவகை கொள்வோம்!! - "நிடாகத்"... வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு..



சவூதி அரேபியாவின் நாளிதழில் வந்துள்ள செய்தி இந்நாட்டில் மட்டுமல்ல பெரும்பான்மையான நடுத்தர வர்க்க வளைகுடா வாழ்இந்தியர்களுக்கு "இடி" விழுந்ததுப் போல இருந்தது. ஆம். பணி / தொழில் நிமித்தம் சவூதியினில் தங்கியுள்ள அனைத்து அயல் நாட்டினருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் சவூதியில் வசிக்க நீட்டிப்பு தர இயலாது என்ற அமைச்சரின் பேட்டி வெளியானது. நம் மக்களுக்கு அவர்களை அறியாமலேயே, தாம் பீதியடைந்தோ அல்லது மற்றவர்களை பீதியூட்டியோ மகிழ்வதில் அலாதி ஆனந்தம் தான்! தேவையற்ற குழப்பங்களுடனும், மன உளைச்சல்களுடனும் மின் அஞ்சல் வாயிலாக பரபரத்த நெஞ்சங்களை அமைதிப்படுத்தவே இப்பதிவு.






(சவூதி) உள்நாட்டு மக்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தினை நீக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முனைகின்றது. முன்னர், அரசு நிறுவங்களில் "சவூதிமயமாக்கல்" திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட சதவீத மக்கள் அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாக இருக்கவேண்டும் என சட்டம் இயற்றி செயற்படுத்தியது. அதோடின்றி, சில துறைகளையும், பதவிகளையும் கட்டாயமாக சவூதியினரே இருக்கவேண்டுமெனவும் வற்புறுத்தியது. இதனை தனியார் துறையினிலும் பின்பற்றக் கோரி நீண்ட காலமாக அறிவுறுத்தியது. அவர்களும் முன்னரெல்லாம் பெயரளவில், உரிமையாளரின் உறவினர்களோ அல்லது உயர்பதவியிலுள்ளவர்களின் பரிந்துரையினிலோ மண்ணின் மைந்தர்கள் சிலரை பணிநியமனம் செய்துக் கொள்வர். அப் பணியாளர்களில் பலர் சம்பளத்தேதியன்று மட்டும் வந்து கையெழுத்திட்டு, பணக் கவரைப் பெற்றுக்கொண்டு காணமல் போகின்ற வரலாறும் உண்டு என எனக்கு முன்பிலிருந்தே இருப்பவர்கள் அடிக்கடி நினைவுக் கூர்வதும் உண்டு..


ஆனால் இப்பொழுதெல்லாம் நிலவரம் அப்படியில்லை.கடுமையான, உடல் மற்றும் மூளை உழைப்பிற்கும் குறிப்பிடும் படியான தொகையினில் சவூதியினர் இருக்கின்றனர் என்பதே ஆரோக்கியமான உண்மை! இருப்பினும் இவர்களின் சதவிகிதம் குறைவு என உள்நாட்டு தொழில் முனைவோர்களே கருதுவதாலும், உள்ளூர் மக்கள் என்பதால் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய ஊதியமும் சலுகைகளும் அதிகம் என்பதாலும், உற்பத்தி மற்றும் சேவைகளின் தரத்தினில் குறை நேர்ந்திடக் கூடாது என்பதினாலும் தனியார் துறையினர் பெருமளவில் அயல் நாட்டவரினையே நாடுகின்றனர். குறிப்பாக, இந்தியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், சிறீலங்கா.... எனக் குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு வேலையின் தன்மைக்கேற்ப முக்கியத்துவம் தருகின்றனர். (ஒரே பணியினை ஒரு இந்தியரையும், மேற்கத்தியரையும் அமர்த்தினால் நம்மை விட கிட்டதட்ட 3 லிருந்து 6 மடங்கு வரை அதிகமான ஊதியம் அவர்களுக்கு வழங்க வேண்டிவரும். ஏனெனில் அவர்களின் நாணயத்தின் மதிப்பு, சர்வதேசச் சந்தையினில் நம்மை விட அதிகம்.)


மலிவான தொகையில் தரமான சேவை கிடைக்கும் போது இங்குள்ளவர்கள் உள்நாட்டு மனித வளத்தைவிட அயல்நாட்டினரையே விரும்புகின்றனர். இங்கு சுமார் 8 1/2 மில்லியன் (85 இலட்சம்) மக்கள் அயல்நாட்டிலிருந்து பணிபுரிபவர்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் எழுகின்றது. இதனைப் போக்கவே "நிடாகத்" எனும் புதிய திட்டத்தினை உருவாக்கி விரைவில் செயல் வடிவம் கொடுக்க முனைகின்றனர்.



தன் நாட்டில் தனக்கு வேலை இல்லாது மற்ற நாட்டவ்ர்களுக்கு மட்டும் இடமளித்தால் எந்தவொரு குடிமகனும் கொந்தளிக்கத் தானே செய்வர். அதனை தவிர்க்கவும், வருடத்திற்கு 100 பில்லியன் ரியால்கள் (தோராயமாக 1 ரியால் = 12 ரூபாய்) தன் நாட்டைவிட்டு வெளியேறுவதை இயன்ற அளவிற்க்கு தடுக்கவும் "நிடாகத்" எனும் இத்திட்டத்தினை பயன்படுத்த விழைகின்றனர்.


என்ன தான் கூறுகின்றது இந்த "நிடாகத்"?

ஒரு நிறுவனத்தின் மனிதவளங்களில் எத்தனை உள்ளூர்வாசிகள் இருக்கின்றனர் என்பதினைக் கணக்கில் கொண்டு மூன்று வகையாக "சிகப்புமஞ்சள் & பச்சை" என அந்நிறுவனங்களை பிரிக்கின்றனர்..


'சிகப்பு' என்பது அரசு கூறும் நெறிமுறைகளை கண்டுக்கொள்ளாத சவூதி மயமாக்கலில் பங்கேற்காத நிறுவனங்கள்.

'மஞ்சள்' என்பது அரசின் நெறிமுறைகளை நிறைவுச் செய்யாது பகுதி அளவு பின்பற்றும் நிறுவனங்கள்.


'பச்சை' என்பது அரசின் நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுபவர்கள்.

சவூதில் இப்போது நம்மவர்கள் (அவர்களின் பார்வையின் படி நாம் மட்டுமல்ல... அரேபியர்கள் அல்லாத அனைவருமே அயல்நாட்டவர்கள்) பணிபுரியும் நிறுவனங்களின் வண்ணத்தினைப் பொறுத்தே சவூதியில் தொழிலாளிகளின் 'இகாமா' என்கின்ற "சவூதி வசிப்பிட சான்றுரிமை"யினை 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை மீள் பதிவு செய்ய வரும்போது, அவர்கள் 6 ஆண்டுகளை கடந்தவராக இருப்பின், அதனை அங்கீகரிக்கவா அல்லது வேண்டாமா என முடிவு செய்வர். நம்மவர்கள் பணிபுரியும் நிறுவனம் "சிகப்பு" அந்தஸ்து பெற்றிருப்பின், மேற்கொண்டு சவூதியில் வசிக்க முடியாது. "மஞ்சள்"நிற அந்தஸ்து பெற்றிருப்பின், "நிடாகத்"தின் விதிகளை நிறைவுச் செய்யும் வரை "சவூதி வசிப்பிடச் சான்றுரிமை"யினை அயலகத் தொழிலாளர்களுக்கு வழங்காது. "பச்சை" நிற அந்தஸ்து கொண்டவ்ர்களுக்கு எவ்வித சிக்கலுமில்லை.


இது தவிர, அரசின் பரிந்துரைகளுக்கும் அதிகமாக தன் நாட்டு மக்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு "பிளாட்டினம்" அந்தஸ்தினை உருவாக்கி பல சலுகைகளை வழங்குகின்றது. இத் திட்டம் குறித்து எழும் ஐயங்களுக்கு விளக்கமளிக்க தொழிலாளர் அமைச்சகம் தயாராக உள்ளது.


'இகாமா' மீள்பதிவு இல்லையெனில் இங்கு சவூதியில் மேற்கொண்டு வசிக்க இயலாது என்பது மட்டுமல்ல மீறி நாம் இருப்பின் சிறைச்சாலை உறுதி தான். 'இகாமா'வினை மையமாகக் கொண்டு தான் வங்கி கணக்கு, மருத்துவம், காப்பீடு என அனைத்தையும் செயற்படுத்த இயலும்.


இந்த "நிடாகத்" திட்டம், "சிகப்பு மற்றும் மஞ்சள்" நிற அந்தஸ்து கொண்ட நிறுவனங்களில் பணிபுரிபவ்ர்களுக்கே சிக்கல். இருப்பினும் இதில் ஒரு மகிழ்வுக்குரிய செய்தி என்னவெனில், "சிகப்பு அல்லது மஞ்சள்" நிற அந்தஸ்து நிறுவனங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் "பச்சை" நிற அந்தஸ்துக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புக் கிட்டினால், முன்னாள் நிறுவனத்தின் "பணிக்கான தடையில்லாச் சான்றிதழ்" NOC (No Object Certificate) இன்றியே நேரடியாக அந்நிறுவனத்தில் சேர இயலும். இது வளைகுடாவிலேயே பணி புரிய விழைபவர்களுக்கு ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம்.


ஒன்றை நாம் நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும்.என்றிருந்தாலும் நாம் வளைகுடாவிற்கு அந்நியர்கள்! எதுவும் நடக்கலாம்!! எப்போதும் நடக்கலாம்!! "சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா?" எனும் உண்மையினை உணர்ந்து மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டால் இது போன்ற அறிவிப்புகள் நம் மனதினைப் பாதிக்க வாய்ப்பில்லை. மனதளவில் ஊர்ப்பக்கம் செல்ல நினைத்தாலும், பல்வேறு பிணைப்புகளிலும், நிர்ப்பந்தங்களிலும் சிக்குண்டுள்ள நம்மை, இயற்கையே இந்நாட்டின் விதிமுறைகள் மாற்றம் வாயிலாக தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது என மகிழ்வோம்கலவரம் வேண்டாம். களிஉவகை கொள்வோம்!! பக்ரைனிலும், ஏமனிலும் புரட்சிவெடித்திருப்பதால், சவூதியில் எழுந்துள்ள இப் பொறி விரைவில் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் பரவும் வாய்ப்பு மிகவும் அதிகம்!


குறிப்பு: இவர்கள் நினைப்பது போல் அந்நிய நாட்டினரின் மூளை மற்றும் உடல் உழைப்பினை அவ்வளவு எளிதினில் புறக்கணிக்க இயலாது. அவ்வாறு முனைந்திடின் தற்போதுள்ள இயல்பு வாழ்க்கை தடம்புரண்டுவிடும் எனும் உண்மை இவர்களுக்கும் தெரியும்!

Saturday, June 4, 2011

கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி ராம்தேவ் இன்று முதல் உண்ணாவிரதம்



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateபுதுடெல்லி : வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கறுப்பு பணத்தை மீட்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லி ராம்லீலா மைதானத்தில் திட்டமிட்டபடி இன்று உண்ணாவிரதம் தொடங்குகிறார். அவரை சமாதானப்படுத்த மத்திய அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

‘நாட்டில் ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்‘ என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு நாடு முழுவதும் பலத்த ஆதரவு பெருகியது. இதையடுத்து, லோக்பால் மசோதா தயாரிக்க மத்திய அரசு குழு அமைத்தது. இதில் சமூக ஆர்வலர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி யோகா குரு ராம்தேவ், டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்குவதாக அறிவித்தார். கடந்த 1ம் தேதி டெல்லி வந்த அவரை மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில்சிபல், பவன்குமார் பன்சால், சுபோத்காந்த் சகாய் ஆகியோர் விமான நிலையத்தில் சந்தித்து 2 மணி நேரம் பேச்சு நடத்தினர். ராம்தேவ் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

பரபரப்பான சூழ்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள் பங்கேற்று ராம்தேவ் உண்ணாவிரதம் குறித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில், ராம்தேவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் பங்கேற்க ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். 

அவர்கள் மத்தியில் ராம்தேவ் நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘என் உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை. எந்த கட்சிக்கு எதிராகவும் உண்ணாவிரதம் நடத்தவில்லை. இதற்கு எந்தக் கட்சியும் செலவு செய்யவில்லை. லட்சக்கணக்கான கோடி ரூபாய் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது. அந்த பணம் மக்களுடையது. அதை மத்திய அரசு மீட்டு வர வேண்டும்’ என்றார்.

அதன்பின் ஓட்டல் அறைக்கு திரும்பிய ராம்தேவை மத்திய அமைச்சர்கள் கபில்சிபல், சுபோத் காந்த் சகாய் ஆகியோர் சந்தித்து மீண்டும் சமரச பேச்சு நடத்தினர். இருதரப்புக்கும் 5 மணி நேரத்துக்கு மேல் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. பின்னர் நிருபர்களை சந்தித்த ராம்தேவ், ‘‘மத்திய அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, திட்டமிட்டபடி உண்ணாவிரதம் தொடங்குவேன்’’ என்றார்.

அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், ‘‘ராம்தேவுடன் நாங்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம். அவர்களுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், ஒரே நாளில் எல்லா பிரச்னைக்கும் முடிவு காண முடியாது’’ என்றார். ராம்தேவ் உண்ணாவிரதத்துக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹாசாரே, எதிர்க்கட்சி பா.ஜ.வும் ஆதரவளிக்க முன்வந்துள்ளதால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

பிரதிபாவுடன் மன்மோகன் சந்திப்பு

ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நடந்த சந்திப்பின் போது, ராம்தேவின் உண்ணாவிரத போராட்டம், மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதிபாவிடம் மன்மோகன் எடுத்துரைத்தார். மேலும், சமீபத்தில் எத்தியோபியா, தான்சானியா நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் குறித்தும், அந்த நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்தும் மன்மோகன் விளக்கினார்.

Friday, June 3, 2011

கிருத்தவத்தை தழுவிய முஸ்லிம் மாணவி!

அமெரிக்க பத்திரிக்கைகளில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வு பாத்திமா ரிப்கா பேரி என்ற முஸ்லிம் மாணவி கிருத்தவ மார்க்கத்தை தேர்ந்தெடுத்ததை. கடந்த 2000 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு குடி பெயர்கிறது பேரியின் குடும்பம். பாத்திமாவுக்கு கண்ணில் சிறு ஆபரேஷன் பண்ண வேண்டி இருந்ததால் அமெரிக்காவில் வந்து குடும்பத்தோடு செட்டில் ஆகிறார்கள். தந்தை முகமது பேரி தனது இரு பிள்ளைகளையும் கிறித்தவ கான்வென்டில் படிக்க வைக்கிறார். இங்குதான் பிரச்னை ஆரம்பம் ஆகிறது. அந்த கான்வென்டில் கிறித்தவ மார்க்கத்தை போதிக்கிறார்கள். அந்த போதனைகளில் மெய் மறந்த பாத்திமா கிறித்தவராக மாறுகிறார் ரகசியமாக. ஒரு முறை பாத்திமாவின் சகோதரன் தன் தங்கை கையில் பைபிளோடு மற்ற குழந்தைகளிடம் மதப் பிரச்சாரம் செய்வதை பார்த்து விடுகிறான். சகோதரியின் நிலைமையை தனது தந்தையிடம் மகன் சொல்ல பிரச்னை வெடிக்கிறது. தனது மகளை திரும்பவும் இஸ்லாத்துக்குள் வந்து விடுமாறு தந்தை கண்டிக்க பிரச்னை அதிகமாகவே வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார் பாத்திமா. ஓர்லோண்டோவில் உள்ள சர்ச்சில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் பாத்திமா. 'படிக்க அனுப்பிய குழந்தையை மனம் மாற்றி என்னிடமிருந்து பிரித்து விட்டனர். என் மகள் இன்னும் மேஜராகவில்லை' என்று தந்தை முகமது கோர்ட்டில் கேஸ் போட்டுள்ளார். பாத்திமாவோ 'என்னை விட என் பெற்றோர் கடவுளைத்தான் அதிகம் நேசிக்கிறார்கள். நான் திரும்பவும் வீட்டுக்கு செல்ல மாட்டேன்' என்கிறார். இவரின் தாயோ 'என் ஒரே மகளை என்னிடம் திருப்பித் தாருங்கள்' என்று கண்ணீர் மல்க கூறுகிறார். 'நூர் இஸ்லாமிய அழைப்பு மையத்தோடு என் பெற்றோர் தொடர்பு வைத்துள்ளனர். நான் அங்கு சென்றால் என்னையும் தீவிரவாதியாக மாற்றி விடுவார்கள். என்னை கொன்றும் விடுவார்கள்' என்று பாத்திமா தனது பெற்றேறாரைப் பற்றி பேட்டியும் கொடுத்துள்ளார். ஆனால் நூர் இஸ்லாமிய அமைப்போ புது முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை பயிற்றுவிக்கும் அமைப்பாகவும் பல நற்பணிகளையும் செய்து வருகிறது. கொலம்பஸ் மாகாண போலீஸோ பாத்திமாவின் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்கிறது. நூர் இஸ்லாமிய அமைப்பின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த பாத்திமாவை பகடைக்காயாக பயன்படுத்துவதாக முகமது பேரியும் மற்றும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்கும் போதே தனது கலாச்சாரத்துக்கு ஏற்ற பள்ளிகளாக பார்த்து சேர்த்தால் இது போன்ற பிரச்னைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகளின் விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த வயதுதான் அவர்களை மிகவும் தடுமாற வைக்கும் வயது. பிற்காலத்தில் ஏசுநாதர் கடவுளல்ல அவரும் முகமது நபியைப்போல ஒரு இறைத்தூதர்தான் என்ற உண்மையை உணருகிறாரா அல்லது கிறித்தவத்திலேயே ஐக்கியமாகி விடுகிறாரா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.